Saturday, 23 November 2013

என் கடமை


வளரிளம் பருவம் வாழ்வின் “ஆடி- நல்

“பழக்க விதைகளை விதைக்கணும் தேடி –இங்கே

களர்நிலம் போன்ற மானிடர் கோடி – எவரும்

கடமை மீறினால் சேரும் காரிருள் நாடி!!!

இலக்கணமின்றி இலக்கி யமுண்டோ?

இலட்சியமின்றி வாழ்வு தானுண்டோ?

சிலகணமாயினும் சிந்தித்தே –நாம்

வகுக்கணும் நமது  வாழ்வு தனையே!!

வெல்லமா யிருப்பினும் வீதியில் உண்கிலேன் – என்

கொல்லைப்  புறத்திலும் குப்பையை சேர்க்கிலேன்.

கொல்லும் வியாதிதரும் கொசுவையும் ஒழிக்க – நான்

ஒல்லும் வகையெலாமென் சூழலை மாற்றுவேன்  

உள்ளத் தூய்மையுடன் உடலையும் பேணுவேன்

இன்சொலும் நன்செயலும் மீறினால் நாணுவேன்

நல்ல மனிதரின் நட்பையே நாடுவேன்

நானிலம் போற்றிட நானிங்கே வாழுவேன்!!!

இந்திய ஒருமைப்பாடு- இரா வெயினி VIII A


முன்னுரை: இந்தியா ஒரு துணைகண்டமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை. இங்கே பலதரப்பட்ட மொழி இனம் சார்ந்த மக்கள் ஆதி காலம் தொட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் வேறுபட்ட மதம், மொழி கலாச்சார படையெடுப்புகள் இருந்தும் நமது நாடு இன்றும் ஒரே சிந்தனையில் வளர்ச்சியில் செல்வதற்கு நமது முன்னோர்களின் அரிய பங்களிப்பும்,ஒருமைப்பாடும்  அர்ப்பணிப்பும்தான் காரணம்.
முப்பது கோடி முகம் உடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள்- இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்
சிந்தனை ஒன்றுடையாள். 
ஒரே மொழி ஒரே மதம் ஒரே ஆட்சி என்று நம்மை விட்டு பிரிந்து சென்ற பாகிஸ்தானில் இன்று நிம்மதி இல்லை.  

பொருளுரை: இன்று நமக்கு ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானை நினைத்துப் பார்த்தோமானால், நாம் அதிர்ஷ்டசாலிகள் தான். இந்தியா சுதந்திர நாடுதான், குடியரசுத் தலைவரைக் கூட விமர்சிக்க முடிகிற இந்தியா எங்கே, எப்போது யார் இயந்திரத் துப்பாக்கியுடன் வந்து சுடுவார்கள் என்று நிச்சயமில்லாத பாகிஸ்தான் எங்கே?
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு  நம்மில்
ஒற்றுமை நீங்கினில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தெரிந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும் ?”
 1956 முதல் 1958 வரை மட்டும் ஜனநாயக ஆட்சி அமுலிலிருந்தது. அதன்பின் 1972 வரை இராணுவ ஆட்சிதான். பிற்பாடு பல்வேறுகட்சிகள், அரசியல் பழிவாங்கல் படலங்கள் என்று எந்த ஆட்சியாளருக்கும் நாட்டின் வளர்ச்சி பற்றியோ, பொருளாதார தொலைநோக்கு பற்றியோ அதிகம் சிந்திக்க நேரமில்லை. தற்போதைய அதிபர் முஷ்ரப் கூட தன் நாற்காலி பற்றிய பயத்தோடும் தன் உயிர் பற்றிய பயத்தோடுமே காலந்தள்ளி வருகையில் பொருளாதாரமாவது மண்ணாங்கட்டியாவது! பாகிஸ்தானிலிருந்து எத்தனை நிறுவனங்கள் உலக அளவில் பெயர் பெற்றுள்ளன? எத்தனை நிறுவனங்கள் உலகளாவிய கிளைகளை வைத்துள்ளன? உலகளவில் என்ன மதிப்பிருக்கிறது பாகிஸ்தானிற்கு?  உள்நாட்டிலும் அமைதியை ஏற்படுத்த முடியாமல், வெளிநாட்டிலும் நெருக்கடிகளுக்காளாகி அந்த நாடு வரும் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகப் போகிறது என்பது மட்டும் திண்ணம்.
நாம் இனி செய்ய வேண்டியவை:
மறுபக்கம் இந்தப் பொருளாதார முன்னேற்றம் எல்லா அடித்தட்டு மக்களுக்கும்போய்ச் சேர்நதிருக்கிறதா என்றால், நிலைமை சற்று வருத்தமாகத்தானிருக்கிறது, இன்றைக்கும் 70 கோடிக்கு மேலானோர் தினமும் 4 டாலர் வருமானமும் அதற்கு கீழேயும் பெறும் வறுமையில் இருக்கின்றனர். அரசிடம் இவர்களுக்கான திட்டங்கள் இருக்கின்றனவா என்பது கேள்வி. ஆம், இருந்தன, இருக்கின்றன. உண்மையில் இப்படிப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் 'இலவசங்களாக'வே மக்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றிலும் கைமாறிச் செல்லும் பனிக்கட்டியாய் துளி மட்டுமே அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது. இங்கேயும் மீண்டும் என்னை பாரதியின் கண்ணீர் வரிகள்தான் உறுத்துகிறது..
“நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடி என்றல் அது பெரிதாமோ?”
காவிரியில் நீர் தர மறுக்கும் கர்நாடகவில்தான் நமது கணினி படிப்பாளிகள் அதிகம் உழைகின்றனர். ஆனால் நமது கடைமடை விவசாயிகள் நீர் ஆதாரம் இன்றி விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.  அரசியல்கட்சி வளர்க்கும் சுயநலம் மேலிட்டதால், மக்களை சுயசார்புள்ளவர்களாக ஆக்குவதை விட்டு விட்டு கையேந்திகளாகவே வைத்திருக்கிறார்கள். மக்களும் அரசு இலவசமாகத் தரவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
சுயஉதவி குழுக்களும் மக்கள் இயக்கமும்: இன்றைக்கு நிறைய இளைஞர்கள் குறுகிய காலத்தில் தேவைக்கும் அதிகமாகச் சம்பாதித்து விட்டு தன் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நமைச்சலுடன் திரிகிற அவர்களை ஒருங்கிணைத்தால் ஒரு பெரிய சமுதாய பொருளாதார மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வரமுடியும்
ஆனாலும் மற்றம் என்பது சிறிய படிக்காத மக்களிடம்தான் மக்களால் உருவாகிறது. களஞ்சியம் என்ற அமைப்பின் நிறுவனர் சின்னபிள்ளை போன்ற, ஏழை என்றாலும் படிக்காத மேதைப்  பெண்கள்தான் நாட்டின் மிகபெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். புரா போன்ற இன்னபிற சுய உதவிக்குழுக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருப்பதை அரசு இயந்திரம் முழு மூச்சில் என்றைக்கு தனது கொள்கையாக கொண்டு வருமோ அன்றுதான் இந்த இலவச எதிர்பார்ப்பு மனநிலை ஒழியும். ஒவ்வொரு குடும்பமும் தன்னிறை வுறும். மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற அருமையான உத்தி கந்து வட்டியாளர்களை விரட்டிவிடும். ஆனால் எத்தனைபேர் இன்று மைக்ரோ ஃபைனான்ஸ் செய்கிறார்கள், எத்தனைபேருக்கு அப்படி ஒன்று இருப்பது தெரிகிறது.
நமது கடந்த கால பாதை : 1947-ல் சுதந்திரம் வாங்கியபின் 1950-ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு 57 வருடங்கள் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது (இடையில் சிலகாலங்கள் நெருக்கடி நிலைப் பிரகடனம் தவிர்த்து). பொருளாதார முன்னேற்றம் என்று பார்த்தால் 1990க்குப் பிறகு தொடர் வளர்ச்சிதான், ஆனால் அதற்கான ஆயத்தங்கள் 1980களிலேயே ஆரம்பித்துவிட்டது என்றால் பொய்யில்லை. வெகுகாலத்திற்கு, யானை போன்ற இந்தியா படுத்தே இருந்ததால் பல நாடுகள் இந்தியாவைப் பொருட்படுத்தவேயில்லை. ஆசியான் அமைப்பின் பாங்காக் அறிவிப்பில்கூட இந்தியாவை குட்டியூண்டு நாடுகள் பொருட்படுத்தி அழைக்கவில்லை. 1990-களில் நமது அரசாங்க முயற்சியின் விளைவால் இந்தியாவை ஒரு புதிய பாதையை நோக்கி செலுத்தத் தொடங்கியபோது, படுத்திருந்த யானை எழுந்தாற்போல இருந்தது. இன்றைக்கு இந்தியாவைப் பற்றி சிந்திக்காத பேசாத பொருளாதார அரசியல் வல்லுநர்கள் இல்லை. அதாவது, யானை தரையதிர ஓடத் தொடங்கியிருக்கிறது. அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.
முடிவுரை:
இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றி உணர்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்த இளைஞர்கள் மற்றும் பேரிளைஞர்கள் கூட்டம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து புற்றீசல்போலப் புறப்பட்டு உலகெங்கும் சென்ற இந்தியர்கள்   பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு பலநாட்டு நிறுவனங்களை வாங்கிக் குவிக்கும் இந்திய நிறுவனங்கள், உலகிலேயே மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பாலையை நிர்மாணிப்பது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் எலக்ட்ரானிக் முறையில் ஓட்டுப் போடுவது (இன்னமும் பல மேற்கத்திய நாடுகள் பேப்பரில்தான் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்), எகிறும் நில மற்றும் கட்டிட விலைகள், என்று ஒரு பக்கமும்; மறுபக்கத்தில் தீரவே தீராத காஷ்மீர் பிரச்சினை, சரியான சாலைகள் பாலங்கள் அமைந்திராத கிராமங்கள், ஆந்திராவில் நக்ஸலைட்கள், அஸ்ஸாமின் உல்பா, மற்றும் இன்னபிற மத தீவிரவாத அமைப்புகள், இன்னமும் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்கள் மாநிலங்களுக் கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் என்று கதம்பமாக சவால்கள் நிறைந்த இந்தியாவின் எதிர்காலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது.
 “கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றில்லைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்”   
என்ற பாரதியின் வரிகளில் அமைந்த தீர்க்க தரிசனம்தான்  நம்மை அமைதியாக வாழ வைக்கிறது. சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும் பெருமையுடனும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து இந்தியச் சகோதர சகோதரிகளுக்கும் தேசிய ஒருமைப்பாடு என்ற ஒன்றுதான் இன்று சோறு போடுகிறது என்று சொன்னால் மிகையில்லை.