Saturday, 3 August 2013

விபத்தின் காரணம்: அறியாமையும் அலட்சியமும்


விபத்தின் காரணம்: அறியாமையும் அலட்சியமும்    

முன்னுரை:  

உலக அளவில் நாம் பிற நாடுகளை விட எதிலாவது விஞ்ச வேண்டாமா?  பின்தங்கிய நாடு என்று எத்தனை நாளைக்குத்தான் இருப்பது? எனவே நமது நாட்டினர் விஞ்சிவிட்டார்கள். எதில் என்கிறீர்களா? சாலை விபத்துகளில்தான். இந்த விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் படும்பாட்டை விவரிக்கவே முடியாது. ஒரு குடும்ப தலைவரின் மரணம் என்றால் அதில் அதிகம் பாதிக்க படுவது அவரின்  வாரிசுகளின் எதிர்காலம் தான்.  விபத்துகளில் பாதிக்கப்பட்டு முடமாகிப் போகிறவர்களின், அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கை இன்னும் துயரமானது.

அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..?
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...

நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...

என்கிறார் கவிஞர் தமிழ் நிலா. இந்த கட்டுரை வாயிலாக நாம் விபத்தின் காரணிகளாக உள்ள அறியாமையும் அலட்சியமும் பற்றி விரிவாக அலசி ஆராய்வோம்.

பொருளுரை:வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?

நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.

புள்ளி விபரம் சொல்வதென்ன?:

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது. 2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு. அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்து 768 பேர். அதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 800 பேர் என்று அது கூறியது. அதாவது 73 சதவீதம் சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன.

19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.

விபத்தின் காரணம் ஓட்டுனரின் அலட்சியமே: 
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது ஒரு அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

 

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 
1 .சாலைகள் வடிவமைப்பு

 புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன.

 2. பழுதடைந்த சாலைகள்

குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .

3 .பொதுமக்கள் அலட்சியம்  

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .

4. தரமற்ற வாகனங்கள்

காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .

5. குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

6. தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள்.  அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5  மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

7. ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

8. வேகம்

பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

   9.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாகபயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.

   10.   அதிக பயணிகள்:

வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

   11.   செல்போன்:

எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸ்ஸை ஓட்டுகிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள்.

   12.   ஆணவம்:

பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ, பெரும்பாலான சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

   13.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

14 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன

முடிவுரை: சமூக அக்கறையின்மை என்றால்  ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. “தன் சட்டைக்குத் தீப்பிடிக்கும்வரை இங்கே எவனுக்கும் சமுதாய அக்கறை இல்லை” என்ற கவிதைதான் அது. நமக்குச் சமுதாய அக்கறை குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நம்முடைய நாடு உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது'
தனது 18 வயதுப் பையனுக்குக் கார் வாங்கிக் கொடுத்து ஓட்டச் சொல்லி அழகு பார்க்கும், பெருமைப்படும் பெற்றோர்கள் இருக்கும் வரை சாலை விபத்துகள் அதிகரிக்கத்தான் செய்யும்.  

சாலை விபத்துகளில் பலியாகிறவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. சமீர் ஆனந்த்  என்பவர் மிகத் திறமையான ஐஐடி மாணவர். அவருக்கு வெளிநாட்டில் மிக  அதிகமான சம்பளத்தில் வேலைகள் கிடைத்தன. ஆனால் நமது நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் வேண்டும் என்பதற்காகவே அந்த வேலைகளுக்கெல்லாம் அவர் போகவில்லை. அவர் தனது இளம் வயதிலிருந்தே பலமுறை இரத்ததானம் செய்திருக்கிறார். மக்களுக்கு நிறையச் சேவைகள் செய்து வந்தார். அவர் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். எல்லாம் ஒரு நொடியில் நின்று போனது. ஒரு அவசரக்காரர் நிதானமாக வாகனத்தை ஓட்டாததால் அவர் உயிரிழந்தார்.   சாலை பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முழுமூச்சாக அனைவரும் ஈடுபட வேண்டும்.  

13 comments: